நமது மூச்சுக்காற்றானாது உள்ளே வெளியே என்று ஓடும் நிலையிலிருந்து அதை உடலின் உட்புறமாக மேல் கீழ் என்று ஓடும் நிலைக்கு அதன் வழக்கமான பாதையிலிருந்து அதை மாற்றி அமைக்க வேண்டும். அதன்பின் அவ்வாறு உட்புறமாக மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை தொடர்ந்து கவனிப்பதின் மூலம் அப்படி கவனிக்கும் மனமே அந்த மூச்சுக் காற்றோடு கலந்து மேலும் கீழும் ஓடும் நிலை ஏற்படும். இப்படி பயிற்சி செய்யும் போது மனதில் எண்ணங்கள் ஏற்பட்டால் அது நம்மை மூச்சின் ஓட்டத்தை கவனிக்க விடாமல் அதோடு இணைந்து இருக்க விடாமல் நம்மை எங்கோ எடுத்துச் சென்றுவிடும். மீண்டும் சுயநிலைக்கு வந்து மூச்சைக் கவனிக்க சில நொடிகளோ நிமிடங்களோ ஆகலாம். அது அவரவர்கள் உலக வாழ்வில் எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள் உலக விசயங்களில் எவ்வளவு தங்களது மனதை சிக்க வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்தது. ஆனால் விழிப்புணர்வோடு இருப்பேன் மனதின் பின்னால் செல்லாமல் மூச்சை தொடர்ந்து கவனிப்பேன் என்று சில முறை சங்கல்பம் செய்து கொண்டு செய்தால் மனம் வெளியே ஓடினாலும் விரைந்து மீண்டும் மனம் திரும்பி வந்து மூச்சினை தொடர்ந்து கவனிக்க முடியும். இந்த இடத்தில் மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை போல் பாவித்து கவனிக்கும் மனதை அதன் மேல் ஏறி அதை இறுக பிடித்துக் கொண்டு சவாரி செய்ய வேண்டிய குதிரை ஓட்டியாக காணலாம். தொடர்ந்து மூச்சைக் கவனித்து அந்த மூச்சாகவே நாமும் மேலும் கீழும் உட்புறமாக ஓடும் போது சிறிது சிறிதாக குதிரையின் அதாவது ஓடும் மூச்சின் வேகம் குறையும். மூச்சின் வேகம் குறைவதற்கு ஏற்ப அந்த மூச்சாக மாறி தாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேகமும் குறைவதை காணலாம். ஒரு கட்டத்தில் நெஞ்சுக் குழியில் குதிரை தன் ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி நிற்பதை அதாவது மூச்சுவிடுவது முற்றிலும் நின்றுவிடுவதை காணலாம். அப்போது அங்கே ஒரு துடிப்பினை உணர நேரிடும். அந்த துடிப்பை ஆழ்ந்து கவனித்து அந்த துடிப்பாகவே மாறி நீங்கள் துடிக்கும் போது மனமும் இருக்காது. மூச்சும் இருக்காது. இதுவே வாசியோக மோட்ச சூத்திரம் ஒன்று.