குருவே துணை.
1. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் மனமே காரணம்.
பற்றுள்ள நிலையே பந்தம். பற்றற்ற நிலையே மோட்சம். எல்லாம் நானே. இருப்பது நான் ஒருவனே. நானே ஏகனாக, அதாவது ஒருவனாக எங்கும் எல்லாமாக இருக்கிறேன் என்று உணர்கிற போது அங்கே தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்று உணர்கிறபோது அங்கே அடைவதற்கு பொருளோ நபரோ இல்லாமல் போகிறது. எதன் மேல் ஆசைப்படுவது? யார் மேல் ஆசைப் படுவது? இருப்பது நான் மட்டுமே. இதுவே மோட்சம். இப்படி இல்லாமல் தன்னை தவிர தன்னை சுற்றிலும் பல மனிதர்களும் பொருள்களும் உள்ளன. அவற்றில் எதிலிருந்து இன்பம் கிடைக்கும் அது மேலும் மேலும் வேண்டும் என்கிறபோது அங்கே அறியாமை உண்டாகிறது. பற்று ஏற்படுகிறது. பந்தம் ஏற்படுகிறது. பந்தம் பற்று இரண்டும் மனதின் இருவேறு நிலைகள்தான். இரண்டுமே மனதில் தோன்றுவதுதான். ஒன்று அறியாமை. மற்றொன்று உண்மையை அறிந்த ஞானம். மோட்சம்.
2. ஜீவன் இருந்தாலும் கூட மனமிருந்தால் மட்டுமே ஒரு உடலால் காணவோ, கேட்கவோ, அறியவோ முடியும். (தூங்கும் குழந்தை)
3. எந்த ஒன்றும் எதிலிருந்து வந்ததோ அந்த இடத்திற்கே, மூலத்திற்கே சென்று அதில் கரைந்து காணமல் போவது இயற்கை நியதி. அது உப்பு தனது மூலமான நீரில் கரைந்து காணாமல் போவது போல. மனம் தனது மூலமான ஜீவனில் கரைந்து காணாமல் போவது போல. (தூக்கத்தின் போது)
சத்தம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? அமைதியில். தனது மூலத்தில். வெளிச்சம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? இருளில். தனது மூலத்தில். கடலின் அலைகள் எதிலிருந்து உருவாகின்றன? எதில் மீண்டும் கலந்து காணாமல் போகின்றன? அதே கடலில். தனது மூலத்தில். உருவங்கள் எதிலிருந்து உருவாகின்றன? எதில் மீண்டும் கலக்கின்றன? அரூபத்தில். வெட்ட வெளியில். தனது மூலத்தில். இறைவனின் உண்மையான திருவிளையாடல் எது? இந்த பிரபஞ்சமும், நீங்களும் நானும் தான்.
4. சிந்திக்கும் மனம் இருக்கும் இடம் தலையில். புருவமத்தியில். நெஞ்சுக் குழியில் அல்ல.
சிந்திக்கும் போது கண்களும் கைகளும் எங்கேசெல்கின்றன? மறந்து போனால் எந்த இடத்தை தட்டுகிறோம்? இடுப்பையா? அல்லது நெற்றிப்பொட்டையா? மறந்து போனால் ஆசிரியர் எந்த இடத்தில் குட்டு வைக்கிறார்? மறந்து போனால் நெற்றியை தேய்பதும் தலையைசொரிவதும் ஏன்? தப்பு செய்தால் அதை பின்பு உணரும்போது கூட தலைதலையாக அடித்துக்கொள்வது ஏன்? மனம் இருக்கும் இடம் நெஞ்சுக் குழியில் என்றால் ஏன் சிந்திக்கும் போது எல்லா செயல்களும் மேல் நோக்கி, தலையை நோக்கியே இருக்கின்றன? அதனால்தான் புருவமத்தியில் தீட்சை பெற்றஉடன் உபதேசம் பெற்ற உடன் மனம் 14 அலைச்சுழலுக்கு கீழே வந்து அமைதி அடைகிறது.